குறும்பு குத்தாட்டம் போடும் கும்மிகளை ஏன் ‘வாலு’ என்று அழைக்கிறார்கள் என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தது. குரங்கு என்று நாகரீகமாக அழைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே ‘வாலு’ வந்தது என்று பிற்பாடுதான் தெரியவந்தது. நரிக்கும் வாலுண்டு, ஓநாய்க்கும் வாலுண்டு. ஏனோ தந்திரவாதிகளை வாலு என்று அழைக்காமல் ஓநாய் என்கிறார்கள். குரங்கு நல்ல விலங்கு என்பதாலோ?

ராஜேந்திரகுமார் என்றால் என்ன நினைவுக்கு வரும்? முதலில் நினைவுக்கு வருவது தொப்பி. அடுத்தது ‘ஙே’. இந்த ‘ஙே’ என்ற எழுத்தை தமிழில் எனக்குத் தெரிந்து பயன்படுத்தியவர் இவர் மட்டும்தான். ஒருவேளை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ’ஙே’-வுக்கு அடுத்தது பேய்க்கதைகள். சிறுவயதில் அவரது நிறைய பேய்க்கதைகளை படித்து பயந்திருக்கிறேன். அப்புறமாக பேய்களோடு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு டிஃபன் சாப்பிடும் லெவலுக்கு பழகிப்போனது.

ராஜேந்திரகுமாரின் பேய்கள் பொதுவாக நல்ல பேய்கள். கெட்டவரை பழிவாங்குவதோடு சமர்த்தாக மரத்தில் தொங்க ஆரம்பித்துவிடும். டீனேஜுக்குள் நுழையும்போது அவரது சில எழுத்துக்கள் கிளுகிளுப்பு கூட ஊட்டியதுண்டு. விட்டலாச்சாரியா படங்களில் வருவதுபோல சில பேய்கள் இவரது கதைகளில் மனிதர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

மாலைமதி, குங்குமச்சிமிழ் மாதிரியான பத்திரிகைகளின் தீவிரவிசிறியான அம்மா மட்டுமே ராஜேந்திரகுமாரை ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று என்பார். அவர் குமுதத்தில் எழுதிய நகைச்சுவைத் தொடர் ‘வால்கள்’. மாணவியாக இருந்தபோது இடைவிடாமல் படித்ததாக அம்மா சொல்லுவார். வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் தொடராம். ‘வால்கள்’ வந்தபோது அம்மாவுக்கு எட்டுவயசாம். அப்போன்னா ராஜேந்திரகுமாருக்கு என்ன வயசு இருக்கும்? தாத்தா வீட்டில் ’பொன்னியின் செல்வன்’ தவிர்த்து வேறு தொடர்கதைகளை ‘பைண்டு’ செய்து வைக்கும் வழக்கம் இல்லாததால் எனக்கு எதிர்ப்பார்ப்புகளை கிளப்பிய வால்களை நீண்டகாலமாக வாசிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது.

கிழக்குப் பதிப்பகத்தின் விருகம்பாக்கம் கண்காட்சியில் ‘வால்கள்’ கிடைத்தது ஆச்சரியமான ஒன்று. மே 2006லேயே வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

நூலை விடுங்கள். கிழக்கு தந்திருக்கும் முன்னுரை நல்ல சுவாரஸ்யம். ராஜேந்திரகுமாருக்கு வாசகர் வட்டம் பரவியதே வால்களுக்குப் பின்னர்தானாம். 1963ல் இது தொடராக வந்தபின்னர் ஏராளமான தொடர்கதைகள், சிறுகதைகளை எழுதி தமிழ்வார இதழ்களின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தாராம். இதே காலக்கட்டத்தில் ராஜேஷ்குமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். திரைப்படத்துறையிலும் ராஜேந்திரகுமார் வெற்றிகண்டதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னென்ன படங்கள் என்று யாராவது பெருசுகள் பின்னூட்டத்தில் எடுத்துத்தந்தால் தேவலை.

மாவடிபுரம் லேடி சாமுவேல் நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளி. ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவைக் கண்டாலே மாவடிபுரத்துக்கு அலர்ஜி. அந்த ஊரின் வால்கள் மொத்தத்தையும் இந்த பிரிவிலேயே சிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு யமன். பள்ளி ஆசிரியைகளுக்கோ அந்த வகுப்புக்கு போகும் ஒவ்வொரு பீரியடும் சிம்ம சொப்பனம் தான். உள்ளே புகுந்ததுமே ‘பே’ என்று பேய்க்கத்து கத்தி அலறவைப்பார்கள். ஆசிரியைகள் ’ஙே’ என்று விழிக்க வேண்டியதுதான்.

லீடர் அணிலா, சினிமாநட்சத்திரத்தின் தங்கை பிரேமாதேவி, மைதிலி, வைதேகி, ரேவம்மா, போட்டோகிராபர் சோணாச்சலம்,சீதா, விஜயா, மிலிட்டரி புருஷன் அடிக்கடி கொஞ்சும் மரகதம் டீச்சர், தலைமையாசிரியை என்று நிறைய கேரக்டர்கள். வாலுகள் சமைக்கிறார்கள், படிக்கிறார்கள், பிக்னிக் போகிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், நூல் முழுக்க கலகலப்பு. ஆனால், நிச்சயமாக இது குழந்தைகள் இலக்கியம் அல்ல. ஆண்ட்டிகள் படித்தால் மலரும் நினைவுகள். ஸ்கூல் ஃபிகர்கள் படித்தால் நடப்பு வாழ்க்கை. ஆண்களுக்கோ டீனேஜ் பெண்களின் புது உலகம். இளமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிச்சயம் வாசிக்கலாம். 1960 என்றாலே பிளாக் & ஒயிட்டில் அழுதுவடியும் படங்கள் நினைவுக்கு வருகிறது. ஃபிலிம் மட்டும் தான் கருப்புவெள்ளை, வாழ்க்கை அப்போதும் கலர்ஃபுல்லாகவே இருந்தது என்பதற்கு இந்நூல் நல்ல ஆதாரம்.

ஆனால், எனக்கு அம்மா சொன்னமாதிரி குலுங்க குலுங்க சிரிக்கவைக்கவில்லை. கிழக்கு பதிப்பகம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மாதிரி ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக புன்னகை வந்தது அவ்வளவுதான். கிழக்கு பதிப்பக நூல்கள் மீது பலரும், பலவிதமான விமர்சனங்களை வைப்பதுண்டு. என்னுடைய விமர்சனம் என்னவென்றால் இவர்கள் நகைச்சுவை என்று வகைப்படுத்தி பிரசுரிக்கும் நூல்கள் எனக்கு நகைச்சுவையை வரவழைப்பதில்லை, கிரேஸிமோகன் நூல்கள் மாதிரியான ஓரிரண்டு நீங்கலாக. மற்றபடி வெகுஜனவாசிப்புக்கான புதிய தளத்துக்கான கதவுகளை மிக விசாலமாகவே திறந்துவைத்திருக்கிறார்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.

நன்றி : http://www.luckylookonline.com