புத்தகத்தின் பெயர் :ஈழம்: தேவை சமாதானம்
ஆசிரியர் : ஷோபா சக்தி
வெளியீடு :
விலை : ரூ./-
பக்கம்

புத்தக மதிப்புரை:

ஈழத்தமிழ் மக்களுக்கு இப்போது உடனே வேண்டுவது சமாதானமே என்பதை மிக வலுவாக, அனுபவங்களின் உரைகல்லில் உரசி உரக்கப் பேசுகிறது. இந்நூல். மார்கஸ் கட்டுரை, ஷோபா சக்தி கட்டுரை, ஷோபா சக்தி நேர்காணல், மார்க்ஸ் உரை என நான்கு பகுதிகள் அடங்கிய இந்நூல் ஈழப்போராட்டத்தின் இன்றைய நிலையை ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டாக பார்க்க முயற்சிக்கிறது.

ஈழப்பிரச்சனையை முன்வைத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் மேற்கொள்ளும் நிலைபாடுகளை விமர்சனக் கண்ணோட்டத்தோடு இந்நூலாசிரியர்கள் பார்க்கிறார்கள் என்பது மிக முக்கியமானது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர், எதிர்ப்பவர்கள் என்கிற இருசாராரும் ஈழத் தமிழர் சிக்கலை சரியாகப் புரிந்து கொள்ளத்தவறுகின்றனர். இலங்கை அரசும், புலிகளும் யுத்தத்தையே சரணடைந்து கிடப்பதையும்; அந்தப் பாதை தமிழர் – சிங்களர் இருவருக்குமே பெரும் சீரழிவையே கொண்டு வந்திருப்பதையும் ஷோபா சக்தி விவரிக்கும் போது உண்மை அழுத்தமாகவே உறுத்துகிறது, “பிரபாகரன் ஒரு ஹிட்லர் என்றால் கருணா ஒரு முசோலினி” என ஷோபா சக்தி கூறுவதும்; விடுதலைப் போராட்டம் தறி கெட்டு நெறிதவறி ‘யுத்த பிரபுக்கள்’ கையில் சிக்கிச் சீரழிவதை விவரிப்பதும் எளிதில் ஒதுக்கி விடக்கூடாத விமர்சனங்களாகும்.

அது போல தீர்வு காணப்பட்டதாக அல்லது சற்று அமுங்கி இருந்த சாதியச் சிக்கல் தற்போது ஈழத் தமிழர்களிடையே மேலோங்குவதையும்; அதற்கு எதிராக மீண்டும் களத்துக்கு வரும் “தலித் சமூக மேம்பாட்டு முன்னணி” பற்றிய செய்தியையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இந்திய அரசு விரிவாக்கம் போன்ற சில கருத்துக்களில் இந்நூலாசிரியரோடு உடன்பட முடியாவிட்டாலும்; அரசியல் தீர்வு என்கிற மையம் நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்கது.

ஷோபா சக்தி அவரது நிலைபாட்டுக்கேற்ப சில தீர்வுகளை முன்வைக்கிறார்; மார்க்ஸ் தன் பாணியில் காஷ்மீர், நேபாள அனுபவத்தோடு சில யோசனைகளை முன் மொழிகிறார். அதே சமயம் இப்போது தேவை யுத்தமல்ல சமாதானமே என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.