புத்தகத்தின் பெயர் :சாகச ஸ்டார் ஜாக்கிசான்
ஆசிரியர் : சபீதா ஜோசப்
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ.40/-
பக்கம் :88

புத்தக மதிப்புரை:

வறுமை பல சாதனை கலைஞர்களை இயல், இசை, நாடகத்தின் பக்கம் ஒதுங்க வைத்தது என்றால், யாரும் மறுக்க மாட்டார்கள். நடிகவேள் எம். ஆர். ராதா, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், மக்கள் திலகம் எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற திரையுலக ஜாம்பவான்களின் வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் வறுமையின் மிரட்டல் காரணமாகவே சிறுவயதில் இவர்கள் நாடகத் துறையின் கரையோரம் ஒதுங்கியது தெரியும். தமிழில் மட்டுமின்றி உலகெங்கும் இப்படிப்பட்ட கலைஞர்கள் உள்ளனர்.

கராத்தே வீரர் புரூஸ்லிக்குப் பிறகு உலகம் போற்றும் அதிரடி ஆக்ஷன் நடிகரான ஜாக்கிசானும் இந்த வரிசையில் வருகிறார்.

அவர் பிறக்கும் போதே வறுமை துரத்தத் தொடங்கி விட்டது. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் தான் ஜாக்கிசான் பிறந்து வளர்ந்திருக்கிறார். ஏழை தம்பதிக்கு மகனாகப் பிறந்து நாடக உடற்பயிற்சி கூடத்தின் மாஸ்டருக்கு தத்துப் பிள்ளையாகி வீரக்கலையை முறையாக பயின்று வளர்ந்தவர். கடுமையாக உழைத்து உலகின் உச்சங்களைத் தொட்டவர் ஜாக்கிசான்.

குங்ஃபூ, கராத்தே, ஜூடோ, கார்ரேஸ் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். மனிதனின் வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்பதை உணர்ந்து ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் தன் உழைப்பில் கிடைத்த பெரும் பணத்தை செலவிட்டு உதவி வரும் மனித நேயர். எந்த நடிகரிடமும் இல்லாத உயர்ந்த பண்பைக் கொண்ட ஜாக்கிசான் ஆதரவற்ற 100 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்.

இன்றையை வெற்றிக்கு மறுக்க முடியாத முக்கிய காரணம் சிஃபூ மாஸ்டரும், அவரது பள்ளியும் தான் என தனது மலரும் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். சண்டை போடுவதால் மட்டும் எதிரியை வீழ்த்திவிட முடியாது. பேச்சால் அவர்களை வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர் புரூஸ்லீ என்றும் கூறுகிறார் ஜாக்கிசான். எங்கோ பிறந்து வளர்ந்து சாதித்த ஜாக்கிசான், மொழி தெரியாத அந்த மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதும், தெரியாத ஒரு நாட்டில் விமானத்தில் வந்து இறங்கும் போது விமான நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்களின் உற்சாகக் குரல்கள். இது சென்னைக்கு முதல் முறையாக வந்த ஜாக்கிசானுக்கு கிடைத்த அதிரடி வரவேற்பு.

இவரது இயற்பெயர் கோங் – சாங்சான். இளம் பருவம் முதலே பெற்றோரைப் பிரிந்து வளர்ந்த கோங் – சாங்சான் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் சென்ற போது அந்நாட்டவரின் வாயில் இவரது பெயர் நுழைய பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே அந்நாட்டவர் சுருக்கமாக ஜாக்கி என்றழைக்க, அதுவே ஜாக்கிசான் என்றாகி விட்டது.

ஜாக்கிசானின் சாகசங்களை ஊடகங்கள் வாயிலாக நம் வீட்டு குழந்தைகள் ரசிக்கிறார்கள். இருப்பினும் இவர்களின் செயல்களை கண்காணித்து சரி செய்வதும் பெற்றோரின் கடமையாகும்.

ஜாக்கிசானின் வரலாற்றினை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு நூல் வடிவமைத்த நூலாசிரியர் சபீதா ஜோசப்பின் செயல் மதிக்கத்தக்கது. பாராட்டுக்குரியது.