புத்தகத்தின் பெயர் :இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
ஆசிரியர் :நா. வானமாமலை
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.70/-
பக்கம் :108

புத்தக மதிப்புரை:

இந்நூல் இரண்டு பகுதியாக அமைந்துள்ளது. முதற்பகுதி தமிழர்களின் கலை வரலாறு பற்றியதாகவும், இரண்டாம் பகுதி கதைப்பாடல் ஆய்வு பற்றியதாகவும் உள்ளது.

உலக அளவிலும் தமிழக அளவி லும் தொடக்ககால ஓவியங்கள் யானை, புலி, காண்டாமிருகம் முதலியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவனவாக உள்ளன. இவ்வாறான விலங்குகளின் ஓவியங்களை வரைந்து வைத்ததற்கு மனிதர்களின் அழகுணர்ச்சியே காரணம் என்று கொள்ள முடியவில்லை. ஏனென்றால் மனிதர்களைக் கவரும் மலை,கடல்,மரம்,சூரியன் ஆகியவற்றை மனிதர்கள் வரையவில்லை. வலிமையான விலங்குகளை வரைந்தால் அவற்றின் ஆற்றல் தமக்கும் வந்துவிடும் என்ற நம்பிக்கை மனிதர்களிடம் குடி கொண்டிருந்துள்ளது. விலங்குகளைக் குலக்குறியாகக் கொண்டதற்கும் இதுவே காரணமாகும். ஆற்றல், விருப்பு, குலக்குறி நம்பிக்கை, மந்திர நம்பிக்கை இவற்றின் விளைவாகவே தமிழர்களிடம் கலைகள் தோற்றம் கொண்டுள்ளன என்பதை இந்நூல் தெள்ளிதின் விளக்கியுள்ளது.

தமிழகத்தில் முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை, சின்னத்தம்பி கதை, கட்டபொம்மு கதை, ஐவர் ராஜாக்கள் கதை, மருது கதை முதலிய கதைகள் பாடல்களாகப் பாடப்பட்டு வருகின்றன. இக்கதைகளில் வரும் கதை மாந்தர்கள் வீரம் செறிந்த வர்களாகவும், அடிமை மரபுகளை எதிர்த்து நிற்போராகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் சூழ்ச்சியால் கொல்லப்படுவோராக முடிவில் காட்டப்பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்களைப் போல் புரட்சியில் ஈடுபடுவோர் வெற்றிபெற மாட்டார்கள், கொல்லப்படுவார்கள் என்ற எதிர் நிலைக்கருத்து சமூகத்தில் படிந்துவிட்டது என்பதை நூலாசிரியர் நுண்மையாக வெளிப்படுத்தியுள்ளார். கட்டாயம் ஆய்வாளர்கள் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.