புத்தகத்தின் பெயர் :திலகமகரிஷி
ஆசிரியர் : வ.உ சிதம்பரம்பிள்ளை
வெளியீடு :
விலை : ரூ.100/-
பக்கம் :132

புத்தக மதிப்புரை:

தமிழைப் பொறுத்தவரையில் வாழ்க்கை வரலாறு, தலைவர், அறிஞர் வரலாறு என்பது முறையாகத் தொகுக்கப் பெறாத நிலையிலேயே இன்றும் இருந்து வருகிறது. அரிய சாதனைகள் பல நிகழ்த்தி வரலாற்றில் இடம்பெற்ற பலரின் வாழ்க்கைக் குறிப்புகள் கூட முழுமையாகக் கிடைப்பது இல்லை என்பதே இன்றைய நிலை.

திலகரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதும் வாய்ப்பு 1933 இல் வ. உ. சிக்கு அமைந்தது. இன்றும் இலங்கையில் இருந்து வெளிவரும் வீர கேசரி என்னும் நாளிதழில் திலகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ஞாயிறுதோறும் வெளிவந்த அந்தத் தொடர் 28. 5. 1933 இல் தொடங்கியது. வ.உ. சி. ஆய்வாளர்களால் பெயரளவில் மட்டுமே இதுவரையில் அறியப்பெற்ற அக்கட்டுரைத் தொடர் இக்கட்டுரை ஆசிரியரால் கண்டறியப் பெற்று முதன் முறையாக அறிமுகம் செய்யப்பெறுகிறது. வ. உ.சி ஆய்வு வரலாற்றில் இது ஒரு புதிய வரவாகும்.

பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் வரலாறு என்னும் தலைப்பில் அமைந்த அவ்வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை. பதினேழு வாரங்களில் வெளிவந்த பகுதிகளே. அதுவும் தொடர்ச்சி இல்லாமல் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் வ. உ.சியின் ‘திலக மகரிஷியின் வரலாறு’ இங்குப் பதிவு செய்யப் பெறுகிறது.

“அத்தேசாபிமானியின் துன்பகரமான வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டுள்ள விஷயங்களை ஜாக்கிரதையோடு படித்த ஒருவரால் எழுதப்பெற்ற அவரது சுருக்கமான ஜீவிய சரித்திரத்தை அவர் பெயரைப் போற்றும் கோடிக்கணக்கான மனிதர்கள் விரும்புகின்றார்கள். அத்தகைய சரித்திரத்தையே நான் எழுத எத்தனிக்கின்றேன்.

என்று திலகரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடங்குகிறார்.

அந்நிய தேசத்தாரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவில், அவர் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் அவருடைய தேசத்தின் ஆதரவற்ற தன்மையைப் பற்றி அவருடைய மனத்தில் மங்காத ஒர் எண்ணத்தை உண்டு பண்ணின. அந்நியர் ஆள்கையால் ஏற்பட்ட தமது தேசத்தவரின் நபுஞ்சத் தன்மையைத் திலகர் வருத்தத்தோடும் வெறுப்போடும் உணர்ந்தார்.”

“திலகர் முறையே1893 ஆம் வருஷத்திலும் 1895 ஆம் வருஷத்திலும் ஏற்படுத்திய கணபதி உற்சவமும், சிவாஜி உற்சவமும் மகாராஷ்டிர தேசத்து ஜனங்களிடையே தேசாபிமானத்தையும் தேசிய உணர்ச்சியையும் உண்டாக்கின.

“திலகர் ஓர் ஒழுங்கான வழியில் கிளர்ச்சியை நடத்தினார்; ஜனங்களுக்குள் ஆண்மையையும் தைரியத்தையும் புகுத்தினார். ஜனங்கள் தங்கள் நிலங்களை விற்றுத் தீர்வை செலுத்த வேண்டுவது அவசியம் இல்லையென ஜனங்களுக்கு அவர் சொன்னார். அவர் முயற்சிகள் விசேஷ வெற்றி தந்தன.

ஒருவரின் வரலாற்றை எழுதும்போது அவருடைய குணநலன்களை உள்ளவாறு எடுத்துரைப்பதுதான் நெறியானது என்னும் வ. உ.சியின் கொள்கை வாழ்க்கை வரலாறு எழுத முற்படுவோர் பின்பற்ற வேண்டிய பண்பாகும்.

நீதிக்குப் புறம்பான, எந்த நெறிகட்கும் உட்படாத, கொடுமை நிறைந்ததான கர்சன் ஆட்சியின் பிற்பகுதி நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்போது வ.உ சி இவ்வாறு எழுதுகிறார்.

“லார்டு கர்சனுடைய நிர்வாகம், ஆட்சி தீய உடையோடு வந்த நன்மையாயிற்று. இந்திய தேசியக் கட்டிடத்தைக் கட்டியவர் அவரே; அவருக்குத் தெரிந்ததினும் மிக நன்றாக அவர் கட்டிவிட்டார்.”

‘தீய உடையோடு வந்த நன்மை’

எளிய சொற்கள்; ஆனால் மிகப் பெரிய வரலாற்று உண்மையை உள்ளடக்கிய பெருஞ்சிறப்பு; மீண்டும் மீண்டும் நினைந்து மகிழத்தக்க உட் பொருளோடு கூடிய நயம்.

திலகருடையதும் தம்முடையதுமான சமகால வரலாற்றை முழுமையான வரலாற்று உணர் வோடும் வாழ்க்கை வரலாற்று தன்மை குன்றாமலும் ‘இது ஒரு தேவையில்லாத செய்தி’, ‘தொடர்ச்சி இதனால் தடைபடுகிறது’ என்பன போன்ற எண்ணங்களோ, சோர்வோ படிப்போர் மனங்களில் எழா வண்ணம் சுவையோடும் விறுவிறுப்போடும் எழுத முடிவது வ. உ. சியின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது.

விடுதலை இயக்க வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மெல்ல மெல்ல – படிப்படியாக உருவாகி வளர்ந்த தன்மையைத் திலகரின் வாழ்க்கை வரலாற்றின் ஊடே மிகவும் பொருத்தமாகவும், நேர்த்தியாகவும் விவரித்துள்ளார். வ. உ.சி. விடு தலை இயக்கத்தின் பல்வேறு படிநிலைகளை – போக்குகளை திசைமாற்றங்களை இத்தொடரில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

வ. உ.சி பயன்படுத்தியுள்ள தலைப்புகள் படிப்போரைக் கவர்ந்து மனத்தில் பதியும் வண்ணம் அமைந்துள்ளன. அவை அறியவும் மகிழவும் தக்கன. சான்றுக்குச் சில தலைப்புகள் கீழே தரப் பெற்றுள்ளன.

அதைரியமடைந்த மக்களின் உள்ளத்தில் ஆண்மையைப் புகுத்தின அருங்கிளர்ச்சி (24. 9. 33)

மகாராஷ்டிர ஜனங்களை உயிர்ப்பித்த உற்சவங்கள் (8. 10. 33)

காங்கிரசின் துயிலைக் கலைத்த கர்சனின் ஆட்சி (11. 3. 34). அரசியல் தொடர்பான வ. உ. சியின் சொல்லாக்கங்களாக அரிய – அழகிய சொல்லாட்சிகள் தொடர் நெடுக இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றையேனும் குறித்தல் தகும்.

‘இரவல் சுவிசேஷங்கள்’(16. 7. 33)

‘ இராஜீயத் தற்கொலை’ (11. 3. 34)

‘அமிதவாத அலை’ (11. 3. 34)

கர்சனின் ஆட்சிபற்றிய காங்கிரசின் அறிக்கை, திலகரின் முதல் சிறைவாசத்தின் போது சுரேந்திரநாத் பானர்ஜி சிறையில் இருந்த திலகரின் பார்வைக்கு அனுப்பிய காங்கிரசின் தீர்மானம், திலகரின் விடுதலைக்கான மாக்ஸ் முல்லரின் முயற்சி, சூரத் காங்கிரசில் மேடையில் திலகரை அடிக்க முற்பட்ட போது உடனிருந்த கோகலே அதைத் தடுத்தது, சூரத் காங்கிரசில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பிறகு, திலகர் எழுதிக் கொடுத்த ஒப்பந்தம், சூரத் காங்கிரஸ் மாநாடு முடிந்த பிறகு ‘கேசர்’ இதழில் திலகர் வெளியிட்ட கடிதம் – போன்ற மிகப்பலவாய குறிப்புகளைக் கொண்டதோர் வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது வ.உ.சியின் ‘திலக மகரிஷியின் வரலாறு’.