புத்தகத்தின் பெயர் :பறத்தலை விரும்பும் பறவைகள்
ஆசிரியர் : க. அம்சப்பிரியா
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
விலை : ரூ.40/-
பக்கம் :98

புத்தக மதிப்புரை:

‘சமர்ப்பணம் உலகக் குழந்தைகளுக்கு’ என்ற வரியே நூலின் நோக்கத்தை பறை அறைகிறது. பறத்தலை விரும்புவது தானே பறவைகள் கூண்டுக்குள் அடைபட யார்தாம் விரும்புவார்? இது இன்றைய கல்விச்சூழல் பற்றிய ஒரு ஆசிரியரின் பார்வை எனில் மிகையாமோ? மாணவர்களின் சீரான வளர்ச்சியில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒரு சேர பங்கு கொள்வதன் அவசியத்தை வற்புறுத்தி இருக்கிறார் நூலாசிரியர் என்கிறார் ப. கார்த்திகேயன், பொதுவாக உபதேசங்களை இப்போதெல்லாம் யாரும் விரும்புவதில்லை. “சிறுவர்களுக்கென்று தனியே ஒரு நூலகம், அவர்களுக்கான புத்தக அறிவிப்பு இயக்கங்கள், பொழுதுபோக்கிற்கென்றே வயதுக்கேற்று பாவிக்கிற திரைப்படங்களைத் திரையிடுகிற குழந்தைகளுக்காகத் திரை அரங்குகள்; இவை தரமான கல்வியை அடையாளப்படுத்தும். கற்றல் என்பது சுவைபட நிகழும். முழுமையான திறன்களை உருவாக்க ஏதுவாகும்,” என்கிறார் நூலாசிரியர். நேற்றைய குழந்தைகளுக்கும், இன்றைய குழந்தைகளுக்குமே பெருத்த வேறுபாடும் வளர்ச்சியும் உள்ளது. ஆகவே குழந்தைகளை அணுகும் விதமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்நூல் ஒருவகை அனுபவம் சார்ந்த பார்வையை அளிக்கிறது.