புத்தகத்தின் பெயர் :திருவள்ளுவர் அருளிய திருக்குறள்-நுண்ணுரை
ஆசிரியர் : முனைவர் தமிழண்ணல்
வெளியீடு : அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
விலை : ரூ.150/-
பக்கம் :400

புத்தக மதிப்புரை:

திருக்குறள் ஈடு இணையற்ற வாழ்வியல் நூல். அதற்கு எத்தனை பேர் விளக்கவுரை எழுதினும் தெவிட்டாத அமுதம் அது. காலந்தோறும் புதுப்புது விளக்கம் பெற்று இலங்கும் களஞ்சியம் அது. “சுருக்கமாகவே எழுதப்பெறும் சூழலில் முழுமையாகத் தெளிவுபட விளங்க வேண்டுமென்று விரிவுபடுத்தி, அனைவருக்கும் பயன்படும் வகையில் எழுதப்பெற்ற திருக்குறள் தெளிவுரை விளக்கம் என்ற குறிப்புக்கும் நுண் பொருளுரை என்ற அடைமொழிக்கும் நியாயம் வழங்கப்பட்டுள்ளதை இதனை படிக்கும் அனைவரும் ஒப்புக்கொள்வர். திருக்குறளின் உள்ளொளியைத் ‘தேடல்’ நடந்து கொண்டே இருக்கிறது; இன்னும் நடக்கும்” என்ற வரிகளுக்கு ஒப்பவும்; “நயம் காணும் போக்கிலும் நம் காலப் போக்கை ஏற்றிப் பார்க்கும் நோக்கிலும் இவ்வுரை எழுதப்படவில்லை” என்ற வாக்கு மூலத்தின் சுருதி மாறாமலும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. முப்பாலாக மட்டுமின்றி அதற்குள் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல், அரசியல், அமைச்சியல், அரணியியல், கூழியியல், படையியல், நட்பியல், குடியியல், களவியல், கற்பியல் என் 13இயல்களாகவும் பிரித்து பேதமை, பசப்புறபரவுதல், தகையணங் குறுத்தல், இகல், நல்குரவு, இரவச்சம், அலரறிதல், அயர்வயின் விதும்பல் போன்ற பல தலைப்புச் சொற்களுக்கே தற்கால மாணவர் பொருளறியமாட்டார் என்பதுணர்ந்து அதற்கொப்ப ஒவ்வொரு அத்தியாயத் தலைப்புக்கும் பொருள் உரைத்து புகுமுன் ஒளிபாய்ச்சி திரும்ப உள் அழைத்துச் செல்லும் பாங்கு நன்று. பொருள் சார்ந்து இந்த விளக்கவுரையில் மாறுபாடு காண்போர் இருப்பர். அதுவே வள்ளுவர் சிறப்பு; “நவில் தொறும் நூல் நயம்” எனும் பெருமை உடைத்தன்றோ!
நூலில் 13ஆம் பக்கத்தின் கடைசி பாராவில் “பொதுவுடைமையும் உலக சமாதானமும் சோவியத்துகளின் பிரிக்க முடியாத கொள்கை” என்று லெனின் 1917ல் பிரகடனம் செய்ததற்கு 1939-42ல் நடைபெற்ற இரண்டாம் உலக மகாயுத்தம் தாம் காரணம் என விவரித்திருப்பது பெரும்பிழையாகும். அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுவார் என நம்புகிறோம்.