புத்தகத்தின் பெயர் :வாஞ்சை
ஆசிரியர் : மறத்தமிழ் வேந்தன்
வெளியீடு : ஜனநேசன்
விலை : ரூ.60/-
பக்கம் :120

புத்தக மதிப்புரை:

மரங்களை மறந்துவிடுவாயானால் காட்டிற்குள் நீ தொலைந்து போகக் கூடும்; ஆனால் கதைகளை மறந்து விடுவாயானால் வாழ்க்கையிலேயே நீ தொலைந்துபோகக்கூடும்,” என்ற மேற்கோள் ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றது. இதைச் சொன்னவர் அனான் என்ற எழுத்தாளர் என்றும், யார் என்பதே தெரியவில்லை என்றும், அனாமதேயம் என்ற பொருள் தரும் அனானிமஸ் என்ற சொல்லின் சுருக்கம்தான் அனான் என்றும் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. கதை பற்றிச் சொன்னவரின் கதையே தெரியாமல்போய் விட்டது என்றாலும், இந்த மேற்கோள் தொலையாமல் நிலைத்து விட்டது.

எந்தவொரு கருத்தையும் பதிய வைப்பதற்குச் சிறந்த வழி அதனை ஒரு கதையின் மூலம் சொல்வது தான். சமுதாயத்தின் பிற்போக்குத் தனங்களை, சிறுமைகளை, ஆதிக்கக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் முற்போக்குப் படைப்பாளிப் படையில் தன்னை மகிழ்வோடு இணைத்துக்கொண்டவர் ஜனநேசன். இவரது கதைகளின் முதன்மையான தன்மை அவற்றின் எளிமை. வாசிப்பு உலகத்தில் நுழைகிற புதியவர்களை, எளியவர்களை அணைத்துக்கொள்கிற நடை. கதைகளின் செய்திகளோடும் வாசகர்களைஅணைத்துக்கொள்கிற அந்த எளிமையில் தெரிவது படைப்பாளியின் ‘வாஞ்சை.’

மொத்தம் 18 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் கதையே (‘வாஞ்சை’), மத வேலிகள் தாண்டிய மனித ஒற்றுமையை மாறுபட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறது. கிராமத்தில் எல்லோருடனும் சண்டை இழுத்துக் கொண்டிருப்பவள் மாரியம்மாள். அவள் குடும்பமே நாசமாய்ப் போக சபிக்கிறவள் ஆரோக்கியமேரி. ஊரையே அழிக்கப் பாய்ந்த சுனாமி, மாரியம்மாளின் மனதில் மற்றவர்கள் மீதிருந்த ஆத்திரங்களையும் அடித்துச்செல்கிறது. ஒரு காவல் தெய்வமாகவே அவள் உருவெடுக்க, “இவ குடும்பத்தையா நாசமாப் போகட்டும்னு காசுவெட்டிப் போட நினைச்சோம்,” என்று ஆரோக்கிய மேரி உருகிப்போவது இயல்பான மாற்றம். கதையின் உச்சம், தன்னைப் பாராட்டுகிற ஒரு கிழவியிடம், “அட போத்தா, ஒரு உசுரு முங்கி செத்துக்கிட்டு இருக்கிறதப் பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அந்த நேரத்துல சண்டைக்காரங்க சகசக்காரங்க எல்லாம் ஒண்ணுதான்…” என்று மாரியம்மாள் இயல்பாகச் சொல்லி விட்டு தன் வழியே போவதுதான். இப்படிப்பட்ட மாரியம்மாள்கள் மனிதநேயம் பற்றியெல்லாம் படித்திருப்பார்களா என்ன? இவர்களைப் பொறுத்தவரையில், இவர்களிடம் இருப்பது ‘மனுச வாஞ்சை’ அவ்வளவுதான்.

முதலாளித்துவ சமூக அமைப்பு, எளிய உழைப்பாளிகளை அவரவர் தளங்களிலிருந்து விரட்டிக் கொண்டே இருக்கிறது. அப்படி விரட்டப்படும் ஒரு சித்தாள் தொழிலாளி சித்ரா. இதை எதிர்கொள்ள முடிவு செய்யும் அவள், சுயமாக ‘உலாவரும் உணவகம்’ ஒன்றைத் தொடங்குகிறாள். விக்கிரமன் திரைப்படங்களில் இப்படி சுய தொழில் செய்து முன்னேறுகிற கதாபாத்திரங்கள் போன்ற கற்பனையாக இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறபோதே, “இதிலேயும் ஏதாவது பெரிய கம்பெனி கால்வைக்காமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவள் மனதில் அவ்வப்போது எழாமலில்லை,” என்ற வெளிப்பாட்டில் ஜனநேசன் வந்துவிடுகிறார்.

அறிவியல் தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்திக்கொண்டே ஆவி, அதிர்ஷ்டக்கல் என்றெல்லாம் மூடநம்பிக்கைகள் வளர்க்கப்படும் காலம் இது. இவரது ‘மண்டைத் திணிப்பு’ கதை, வெட்டப்பட்ட ஒரு மரத்தின் பின்னணியாக வைத்து ஊரில் பரப்பப்பட்டிருந்த பேய் பீதியைப் பற்றிக் கூறுகிறது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் பேய், முனி, மோகினி, புளியமர தெய்வம் போன்ற கதைகளின் பின்னால் சுய நலக்கும்பல்கள் இருப்பது பற்றிய சிந்தனையை ஏற்படுத்துகிறது இந்தக் கதை.

குடும்பத்தில் பெண்ணுக்கு இருந்தாகவேண்டிய ஜனநாயக உரிமை பற்றிய பெரும் சிந்தனையை ஒரு உரையாடல் மூலம் உணர்த்துகிற சின்னஞ்சிறு கதைதான் ‘பெயர்.’

‘சிகப்பி’ கதையின் நோக்கம் உயர்வானது என்றாலும் அந்த நாயின் செயல்பாடு பற்றிய சித்தரிப்பு மிகை எதார்த்தமாக இருக்கிறது. ‘மறுபிறவி’ கதையும் அப்படியே தெரிகிறது.

கதைகளின் உள்ளடக்கம், வெளிப்பாடு ஆகியவற்றைத் தாண்டி, உரையாடல்களின் சொல்லாடல்கள் நம் மக்களின் இயற்கையான உவமை ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டுக்கு ஒன்று: “வாடி, வா! அத்தையாம்ல! அப்படியே ஒங்கொப்பன் கூட பிறந்து குடலை அத்தது மாதிரி!”

கதையாக்க நேர்த்தியில் இன்னும் எட்ட வேண்டிய உயரங்கள் இருப்பதை ஜனநேசன் உணர்ந்திருப்பார். யாருக்காக எழுதுகிறோம் என்ற அக்கறையோடு, இலக்கியத் தரத்தின் மேன்மையோடும் படைத்தாக வேண்டும் என்பதில் யாரும் சாதித்தாகிவிட்டது என்று ஓய்ந்துவிட முடியாது. மேலும் மேலும் சிறப்பான கதைகளை இவரால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை கலந்த வாஞ்சைதான் இந்த விமர்சனத்தின் வேர்.