புத்தகத்தின் பெயர் :காதல் அமரும் கிளை
ஆசிரியர் : த. ஜீவ லட்சுமி
வெளியீடு :வெளிச்சம் வெளியீடு
விலை : ரூ.30/-
பக்கம் :80

புத்தக மதிப்புரை:

“எனக்காக நீயும்/உனக்காக நானும்/ஒருவரையொருவர்/மாற்றிக் கொள்வதல்ல/நம்மை நாம் இயல்பாக/ஏற்றுக் கொள்வதுதான்/காதல்”. ஆமாம் ஜீவ பாரதி. அதுதான் இன்றும் இனியும் சமத்துவ உலகின் விதியாகும். “இளமை செய்யும் / புரிந்துணர்வு/ஒப்பந்தம்! காதல்” என கச்சிதமாய் வரையறை செய்கிறது. “என் காயம் பார்த்து/அழும்போதும்/காதல் சொல்லத்/தயங்கும்போதும்/உறுதிப் படுத்துகிறாய்/அழுகையும்/வெட்கமும்/ஆண்களுக்கும்/உண்டென்று” வாஸ்தவமான கணிப்பு. “நேசிக்கிறேன்/உன்னை நான்/ கொடியென எனை/வளைக்காமல்/மலரென எனை/வாட விடாமல்/நிலாவென எனை/தேய்க்காமல்/எனை நானாகவே/ நீ நேசிப்பதால்” அடடா… “பஞ்ச் கவிதை”. “என் வெட்கத்தின்/ சரணாலயம் நீ/ உன் ஆசைகளின்/அடையாளம் நான்/ அணைத்துக்கொள்/ ஆசைதீரும் வரை/ மௌன மொழி பேசு/வெட்கம் வேகும் வரை”… இதில் ‘வெட்கம் வேகும் வரை’ என்பதை முன்னுரையில் கவிஞர் அ. வெண்ணிலா சிலாகித்து பேசுவது நியாயமே! “என்னவளே/சத்தமாய்/எனக்கொரு/முத்தமிடு/சாதியத்தின் காதில்/நம் காதல்/ சவுக்கடியாய் விழட்டும்” என கவிஞர் அறிவுமதி சுட்டிக்காட்டும் வரிகள் த. ஜீவலட்சுமியை புதிய பரிணாமத்தில் காட்டுகிறது அல்லவா!

பெண்ணியப் பார்வையில் காதல் கவிதைகள் சமத்துவக் குரலாகவும், அன்பின் இயல்பாகவும் இயற்கையின் ஊற்றாகவும் பெருக்கெடுக்கும் என்பதற்கு காதல் அமரும் கிளை என்கிற இக்கவிதை நூல் சாட்சியாகிறது. எதையும் யாரும் எழுதலாம்… ஆண்/பெண் வேறுபாடில்லை. ஆனால் எழுத்தின் வலிமை ஜீவலட்சுமியைப் போல் அவருக்காக உரக்க பேசவேண்டும்; பரபரப்புக்காக வக்கிரமாய் எழுத வேண்டிய அவசியம் ஆணுக்கும் வேண்டாம் பெண்ணுக்கும் வேண்டாம்.