புத்தகத்தின் பெயர் : மறுபக்கம்
ஆசிரியர் : பொன்னீலன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
விலை : ரூ.375/-
பக்கம் : 752

புத்தக மதிப்புரை:

நாம் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு வகையில் நம்மோடு உரையாடும்; ஆனால், சில புத்தகங்கள் நம்மை தூங்க விடாது. மீண்டும் மீண்டும் நம் நினைவைக் குடைந்து கொண்டே இருக்கும். அப்படி சமீபத்தில் என் தூக்கத்தைக் கெடுத்த நாவல் பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்.’

அந்த நாவலை எழுத அவர் பன்னி ரெண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும்; ஆனால் நூலுக்கான மூலவிதை அதற்கு வெகு காலம் முன்பே தூவப்பட்டு விட்டதாகவும் ‘நன்றியாக’ என முன்னுரையில் குறிப்பிடுகிறார். கடும் உழைப்பின் பலன் நாவலில் பளிச்சிடு கிறது என்பதை முதலிலேயே அடிக் கோடிட்டு கூறிவிடலாம்.

இந்த நாவலை படித்தபின் அசை போடும் போது என் ஞாபகவெளிகளில் சிறுவயதில் என் அம்மா, பாட்டி, வாத்தியார் என பலர் சொன்ன தொன்மக் கதைகள் வந்து போகின்றன. அதுமட் டுமா? நான் எட்டாவது அல்லது ஒன்பதா வது வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன், எங்கள் ஊர் சுசீந்திரம் கோவில் திருவிழாவின் போது ஒரு நாள் சாமி உலா வரும்போது சன்னதித் தெரு வில் சாமி சப்பரத்தை அப்படியே தெரு வில் வைத்து விட்டார்கள். நள்ளிரவு வரை எடுக்கவில்லை. ஊர் முழுக்க பதட் டம். போலீஸ் குவிக்கப்பட்டது. தெருக்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நானும் என் போன்ற பிள்ளைகளும் வலுக்கட்டாயமாக வீடுகளுக்குள் வைத்துப் பூட்டப்பட்டோம். கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை அமைப் பதைதடுத்து கிறிஸ்தவர்கள் நொறுக்குவதாகவும், அதனை எதிர்த்தே இந்த போராட்டம் என்றும் பிறகு மண்டபத்தில் பெரிசுகள் பேசிக்கொண்டதைக் கேட்டி ருக்கிறேன்.

தற்போது சுசீந்திரம் ரயில் நிலையம் இருக்கும் இடத்தில் ஆர். எஸ். எஸ். பயிற்சி தொடங்கப்பட்டது. அதற்கு ஒரு சாமியார் வந்ததும் என் வயதொத்த சிலர் அதில் பங்கேற்றதும் நான் வேடிக்கை பார்க்கப் போனதும் நினைவு இருக்கிறது. இது நடந்தது 1966, அல்லது 67வது ஆண்டாக இருக்கக்கூடும். 1982 இல் குமரிமாவட்டத்தில் வெடித்து தேசத்தையே குலுக்கிய மண்டைக்காடு கலவரத்தின் விதை ஒன்று போடப்படுவதை அறியாமலே வேடிக்கை பார்த்த வயது அது.

“இந்தியாவின் பைத்தியக்கார விடுதி”என கேரளாவின் சாதி உணர்வு கண்டு விவேகானந்தர் பொங்கினார் அல்லவா, அதற்கு சற்றும் குறையாத சாதி உணர்வு ஊறிப்போன மாவட்டமாக குமரிமாவட்டம் இருந்ததை என்னால் அசை போட்டு உணர முடிகிறது.

அந்த மண்ணின் வரலாற்றை மிக நுட்பமாக கிரகித்து மண்டைக்காடுக் கலவரத்தை மையப்படுத்தி ஒரு சமூக வரலாற்று நாவலாக ‘மறுபக்கம்’ பின் னப்பட்டுள்ளது. “பழையாற்றின் வெள்ளம் போல குருத்தோலை மணத்தோடும், நுரை பொங்கும் கள்ளின் காரத்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல்” என சி. சொக்கலிங்கம் கூறுவது மிகைக் கூற்று அல்ல. மண்டைக்காடு கலவரம் ஏதோ விவேகானந்தர் மண்டபம் அமைப்பதையொட்டி வந்தது என்று குறுக்கி பார்ப்பதை இந்நூல் தவிடு பொடியாக்கி அதன் வேரைத் தேடிச் சொல்கிறது.

சேதுமாதவன் எனும் இந்துத்துவ பிடிப்புள்ள இளைஞன்-பள்ளி ஆசிரியர் மண்டைக்காடு சம்பவத்தை ஆய்வு செய்ய வருகிறார். பனைவிளை கிராமத்தில் வெங்கடேசன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் உதவியோடு, முத்து என்கிற பெண் வீட்டில் தங்கி குமரிமாவட்டம் முழுவதும் சுற்றிச் சுற்றி ஆராய்ச்சி செய்கிறார்.

சேதுமாதவன் என்ற ஆராய்ச்சி மாணவனை கைப்பிடித்து பொன்னீலன் அழைத்துச் செல்வது எதற்கு என்பது விளங்குகிறது. அது நல்ல உத்தி; கதை சொல்ல, உரையாடல் நடத்த, பேட்டி எடுக்க, பிரசங்கம் செய்ய, கேட்க, துண்டுப் பிரசுரம் படிக்க, வரலாற்றைப் புரட்ட, கவிதை படிக்க, சுவரொட்டி வாசிக்க, அந்த மாவட்ட வரலாறு நெடுக சுதந்திரமாகச் சுற்றிச் சுழல எல்லையற்ற வாய்ப்பை நாவலாசிரியருக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டது. நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

வரலாற்று ரீதியாக சாணார்கள் ஒடுக்கப்பட்ட கதை, முக்குவர்கள் வாழ்க்கை, ஆதி அம்மை வழிபாடு, கிறிஸ்தவத்தின் வருகையால் கிடைத்த நன்மைகள், அதன் எதிர்விளைவுகள், கிறிஸ்தவத்தை பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் எதிர் வினைகள், அய்யா வழி எனப்படும் வைகுண்டசாமிகள் வழிவந்தோர், ஆர்.எஸ்.எஸ் திணிக்க முயன்ற ஒற்றை பண்பாட்டு முயற்சி, தோள்சீலைப் போராட்டம், அக்கினிக் காவடி போராட்டம், அடிமை வியாபாரம், பனைசார்ந்த கடல் சார்ந்த வாழ்க்கைப்பாடுகள், அது சார்ந்த பழக்க வழக்கங்கள், தொன்மங்கள்,நம்பிக்கைகள் என குமரி மாவட்ட வரலாற்று சுவடுகளூடே மண்டைக்காடுக் கலவரம் உரையாடலாகவும், சம்பவ சித்தரிப்புகளாகவும் நகர்கிறது.

இந்து முன்னணி கொளுத்திய தீ எப்படிப் பற்றிப் பரவியது; மறுபக்கம் கிறிஸ்தவ மதவெறியர் கொளுத்திப் போட்ட வெடிகளும் எப்படிக் காரணமாயின என விஸ்தாரமாக வேணு கோபால் கமிஷன் விசாரணை ஆதாரங்களோடு நகர்கிறது.

கதாநாயகன் சேது மாதவன் ஆராய்ச்சியோடு நிற்காமல்; தற்கொலை செய்து கொண்ட தன் அன்னையின் மூலத்தையும் தேடுகிறான். மதங்களுக்குள்ளும், மதங்களை மீறியும் எங்கும் சாதியம் புரையோடி இருப்பதை இந்நாவல் ஆணி அடித்தாற் போல் பதிவு செய்கிறது. சங்கரன், வெங்கடேசன், மாதவன், அலெக்சு என ஒவ்வொருவர் பார்வையும் வெவ்வேறு விதமாக பதிவாகி உள்ளது “வெறுப்பு அரசியல் வேலைத் திட்டம்”அமலான செய்தி நுட்பமாக ஆனால் வலுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒருவனின் சாதி தெரிந்து விட்டால் அவன் வார்த்தைகளை மதிப்பிட எளிதாக இருக்கும்” என சேதுமாதவன் சிந்திப்பதும்; சாதிய உணர்வு மக்களை எப்படி பாடுபடுத்துகிறது என்பதையும் படிக்கும் போது நாம் தலைகுனிய வேண்டி உள்ளது.

“ஏம்பா,நீ கல்யாணம் செய்யிறதெல்லாம் சரிதான். ஆனா கல்யாணத்துக்கு பிறகு நீ நம்ம கோயிலுக்கு வான்னு அவளக் கூப்பிடக் கூடாதுன்னு” மகனுக்கு புத்தி சொல்லும் அம்மா புஷ்பம்.

“என்னலே வேறுபாடு? வெட்டுப்பட்டுச் செத்த மாடன் நம்மசாமி, சிலுவையில் செத்த மாடன் அவன் சாமி என்னலே வித்தியாசம்?”என கேட்கும் பெரியய்யா.

ஒரு பையன் இந்து, ஒருவன் பெந்த கோஸ்து, ஒருவன் கத்தோலிக்கன், ஒருவன் முஸ்லிம் என தன் குடும்பத்தில் நாலு மதமும் இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு “என்னய்யா மதம்?” எனக் கேட்கும் ஈஸ்வரபாக்கியம் என்கிற ஈசாக்.

அட அடா.. குமரி மாவட்ட ஒவ்வொரு வீட்டிலும் மதம் கலந்து நிற்பதும் ஆனால் அங்கேதான் மதக் கலவரம் வெடித்தது என்பதும் முரண்செய்திகள். ஆனால் அதுதான் குமரிமாவட்ட வாழ்க் கையிலும், வரலாற்றிலும் பொதிந்துள்ள உண்மை. இதை இந்நாவல் நன்றாகவே சொல்கிறது.

தோள் சீலை போராட்டமானாலும், அக்னிக் காவடி போராட்டமானாலும், சாதியத்திற்கு எதிராக கிளர்ந்த மாபெரும் எழுச்சிகள்.

முத்து என்கிற பெண்ணின் வாழ்க்கையினூடே உழைக்கும் மக்களின் பெண்ணியம் கன்னத்தில் அறைகிற மாதிரி பதிகிறது.

இந்நாவல் மதவெறி, சாதி வெறிக்கு எதிரான நாவல். பண்பாட்டு தேடலுக் கான நாவல். முக்கியமாக மதவெறி எதிர்ப்புப் போரில் இது ஒரு ஆயுதமாகவே திகழும் . அதே சமயம் நூல் வெளியீட்டு விழாவில் ஆர். நல்ல கண்ணு விதைத்த ஒரு சிந்தனையை புறந்தள்ளக் கூடாது என்று நாவலைப் படித்தபின் தோன்றுகிறது.

அவர் கூறினார்.. “இந்துத்துவ ஒற்றை கலாச்சாரத் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில்- சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறு தெய்வங்கள் எனப்படும் நாட்டார் வழிபாடு மற்றும் பழக்க வழக்கங்களை ஆதரிப்பது ஒரு ஜனநாயகக் கடமை.அதைத் தொடர்ந்து செய்திட வேண்டும். ஆயினும் அகமணமுறை சாதியை கெட்டிப் படுத்துவது போல சிறுதெய்வ (அ) நாட்டார் தெய்வ வழிபாடுகள் சாதிய பண் பாட்டை கெட்டிப்படுத்துகின்றனவா என்பதையும் நாம் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும்”