புத்தகத்தின் பெயர்  : பள்ளிக்கூடத் தேர்தல்
ஆசிரியர்        : பேராசிரியர் நா. மணியன்
விலை             : ரூ.20/-
பக்கம்               : 48

புத்தக மதிப்புரை:

எனக்கு ரொம்பப் பிடித்த ஆசிரியர் என் வகுப்புக்கு வரவேயில்லை. ஆனால் அவரைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், “அவரைப் பார்த்து யாரும் பயப்படமாட்டார்கள். வருகைப் பதிவைக்காட்டி மிரட்டமாட்டார். மாணவர்களுக்கான சலுகைகளை எச்.எம்-மிடம் போராடிப் பெற்றுத்தருவார். கிழிந்த சீருடையோடு வரும் மாணவனைக் கண்டால் உடனே பணம் கொடுப்பார். மாணவனின் எந்த சந்தேகத்திற்கும் விடை கிடைக்கும். இப்பொழுதும் துரோணாச்சாரிகளும் ஏகலைவன்களும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் இந்த துரோணர் கட்டை விரலைப் பரிசாகக் கேட்காதவர். எனவேதான் இம்மாணவன் அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டான். மாணவர்களின் மூளையில் பாடங்களைத் திணித்து மதிப்பெண்களை வெளித்தள்ள வைப்பதையே சாதனையாகக் கருதுவதா ஆசிரியப்பணி. அல்ல. மாணவர்களின் மனதைச் செதுக்கி சமூகத்தில் நல்ல மனிதனாக அடுத்த வரை நேசிக்கப் பழகுகிறவனாக ஏற்றத்தாழ்வைக் களைய சீற்றம் கொள்பவனாக, மாற்ற முயற்சி செய்பவரே நல்லாசிரியர். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் எங்கே? மாணவர்கள் பேட்டி மூலம் இனங்காணப்பட்டிருப்பவர்கள் பற்றிய தொகுப்பு நூல்தான் “பள்ளிக்கூடத் தேர்தல்” பேராசிரியர் நா. மணியன் அனுபவத்தேடல்கள் நூல் முழுவதும் பளிச்சிடுகின்றன.